search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    X
    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

    • போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    ஈரோடு:

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து பேங்க் ஆபரேட்டர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூய்மை பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் முழு நேர பணி செய்வதால் பணி வரன்முறை செய்து மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 சம்பளம், இதரப்படிகள் முறையாக வழங்க வேண்டும்.

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் படி வேலைப்பளு கூடியதால் பணி வரன்முறை செய்து மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம், இதரப்படிகள் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் சம்பளம், வருகை பதிவேடும், குழு காப்பீடும் செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற, ஓய்வு பெறுகின்ற கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் பணிக்கொடையும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×