search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 331 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதற்காக மேட்டூர் அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அணை திறக்கப்பட்டதும் அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    முதலில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் பயன் அளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் 4,773.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.90 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12-ந் தேதிக்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 19-வது முறையாக ஜூன் மாதம் 12-ந் தேதி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 103.35 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மேட்டூர் வருகையை ஒட்டி அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் குழுவினர் அணையில் முழுமையாக சோதனை நடத்தினர். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் அணைக்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அணை பகுதி மட்டுமில்லாமல் நகர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×