search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி கோவிலில் தாமதமாக வந்த பக்தரை அனுமதிக்காமல் ஊழியர்கள் தாக்குதல்
    X

    பழனி கோவிலில் தாமதமாக வந்த பக்தரை அனுமதிக்காமல் ஊழியர்கள் தாக்குதல்

    • வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும்.
    • ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    நேற்று புரட்டாசி மாத கார்த்திகை என்பதால் மாலை சாயரட்சை பூஜைக்கு பின்பு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருகை தந்தனர். நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும். ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும். அதன்பின்பு பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு பின்பும் பக்தர்கள் அடிவாரத்தில் காத்திருந்தனர். அவர்கள் மலைக்கோவிலுக்கு வர முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் காவலர்களை தரக்குறைவாக பேசினர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவலர்கள் பக்தர் ஒருவரை அங்கிருந்து வெளியேற்றும்போது அவரது ஆடை கிழிந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி கோவிலுக்கு ராக்காலபூஜை நேரத்திற்கு பின்பு பக்தர்கள் உள்ளே வர முயற்சிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    நடைசாத்தப்படும் நேரம் என்பதை அடிவாரம் பகுதியிலேயே குறிப்பிட்டு அதன்பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். பக்தர்கள், பாதுகாவலர்களிடையே இதுபோன்ற பிரச்சனை அடிக்கடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×