search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரம் கோவிலில் ஆகம விதிகளை மீறி அதிக நேரம் நடைதிறப்பா?- பக்தர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு
    X

    ராமேசுவரம் கோவிலில் ஆகம விதிகளை மீறி அதிக நேரம் நடைதிறப்பா?- பக்தர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு

    • தகவல் அறியும் சட்டத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை மதியம் 1 மணிக்கு சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கோவிலில் பக்தர்கள் 2 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் விதிமுறைகளை மீறி மதியம் 1 மணிக்கு நடை சாத்தாமல் 2 மணி வரை நடை திறக்கப்பட்டு இருப்பதாக பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபி ஆச்சார் என்ற பக்தர் நேற்று ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். அவர் மதியம் கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டிருந்ததால் கோவில் அலுவலகத்தில் இருந்த துணை ஆணையரை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தகவல் அறியும் சட்டத்தில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை மதியம் 1 மணிக்கு சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் பக்தர்கள் 2 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறினார்.

    பின்னர் கோபி ஆச்சார் நிருபர்களிடம் கூறும்போது, நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ராமேசுவரம் கோவில் நடை திறக்கும் நேரம், அடைக்கும் நேரம் குறித்து விளக்கம் கேட்டிருந்தேன். அப்போது பகல் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படுவதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் நான் நேரில் வந்து பார்த்தபோது பகல் 1.30 மணி அளவிலும் கோவில் நடை திறக்கப்பட்டுத்தான் இருந்தது. ஆகம விதிகளை மீறி அனைத்து சன்னதிகளும் திறக்கப்பட்டிருந்தது. எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.

    இந்த நிலையில் உள்ளூர் பக்தர்கள் கூறும்போது, ராமேசுவரம் கோவிலுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாவிட்டால் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள். தற்போது கோவில் வெளிநடை தினமும் மதியம் 12.50 மணிக்கு மூடப்படுகிறது.

    அப்போது கோவிலுக்குள் இருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் உள்ளே இருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியேவர மதியம் 2 மணி ஆகிவிடுகிறது. அதன் பின்னர் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

    ஆகம விதிப்படி கோவில் நடை அடைக்கப்பட வேண்டும் என்றால் தினமும் 11.30 மணிக்கு கோவில் வெளிநடையை மூடினால்தான் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு 1 மணிக்குள் வெளியே வருவார்கள் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×