என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.25 கோடி மோசடி- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
- பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார்.
- தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.
திருவள்ளூர்:
வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தீபாவளி சீட்டு நடத்திவந்தார்.
மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்து பணம் வசூலித்தார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார். தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி அப்பாசாமி சாலையில் உள்ள ஜே.பி.ஜோதிக்கு சொந்தமான கடையில் இருந்து இரவு நேரத்தில் பொருட்களை வேனில் ஏற்றுவதை அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் தீபாவளி சீட்டு போட்டவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முகவர்களாக செயல்பட்ட எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தலைமறைவான ஜே.பி.ஜோதியை கைது செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.






