search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் 15-ந்தேதி தி.முக. பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்
    X

    பொள்ளாச்சியில் 15-ந்தேதி தி.முக. பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.
    • பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    அவருக்கு தி.மு.க.வினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதை தொடர்ந்து கோவை ரெட்பீல்ட்ஸ்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு மாலை 5 மணியளவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட உள்ள ஆச்சிபட்டி தனியார் மைதானத்தில், நேற்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, ஏற்பாடுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜனிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவகைள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு உடுமலை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    Next Story
    ×