என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு- கமல்ஹாசன் அறிவிப்பு
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம்.
- பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார்.
அப்போது கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் நேரில் ஆதரவு கேட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார்.
இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெரியாரின் பேரனும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி அருணாசலம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழுபலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனைகள் அற்ற ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவின் பன்முகத்துவத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.
ஜனநாயக சக்திகளின் குரல்வளைகள், கருத்துரிமைகள் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.
இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.






