search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற விவசாயி காட்டெருமை முட்டி பலி
    X

    கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற விவசாயி காட்டெருமை முட்டி பலி

    • காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
    • விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 46). விவசாயியான இவர் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது, 7 காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவஞானம் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்தார்.

    இதற்கிடையே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை திடீரென்று பாய்ந்து வந்து சிவஞானத்தின் மார்பு பகுதியில் குத்தி சாய்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் அருகே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதினார். இதில் நெஞ்சு சிதைந்து சிவஞானம் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துவரங்குறிச்சி, புத்தானத்தம், கண்ணூத்து, மருங்காபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் அதிக அளவில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன.

    இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    இது ஒருபுறமிருக்க மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில் காவல்காரன்பட்டி, எதிர்மேடு உள்ளிட்ட பல இடங்களில் காட்டெருமைகள் குத்தி சிலர் படுகாயமடைந்து உள்ளனர். இதுபோன்ற நிலையில் காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியில் வராமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் கோரிக்கை விடுத்தும் அதற்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை.

    இந்தநிலையில் தான் காட்டெருமை முட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வைக்கின்ற மிகப்பிரதான கோரிக்கை இந்த காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    ஆனால் கூட்டத்தை முடித்தால் போதும் என்ற நிலையில் இருக்கின்ற காரணத்தினால் தான் இப்படி காட்டெருமைகள் தொடர்ந்து வருவதும், உயிரிழப்பை சந்திக்க வேண்டிய துயர நிகழ்வும் ஏற்படுகிறது.

    தமிழக அரசும், வனத்துறை உயர் அதிகாரிகளும் காட்டு மாடுகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிக்குள் புகுவதை கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×