search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவர் கைது
    X

    விருதுநகர் அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவர் கைது

    • முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (வயது 27). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. பழனி லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கிக்கொள்வது வழக்கம். இருந்தபோதிலும் தினமும் மனைவியுடன் செல்போனில் பேசி நலம் விசாரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    காலப்போக்கில் மனைவியுடனான நெருக்கம் குறைந்ததாக பழனி எண்ணினார். மேலும் சாவரியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் சமயங்களில் மனைவி தன்னுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் எண்ணி கவலைப்பட்டார். இதுவே நாளுக்கு நாள் அவரது மனதில் புரையோடி வளர்ந்தது. அது மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகப்படும் அளவுக்கு வந்தது.

    இதையடுத்து பழனி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை காலி செய்து விட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். ஒருபுறம் குழந்தை இல்லாத ஏக்கம், மறுபுறம் மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் இரண்டும் சேர்ந்து பழனியை பாடாய்படுத்தியது.

    அதுவே தம்பதிக்கிடையே பகையாக வளர்ந்து தகராறை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பழனி, தனது மனைவி முத்துவள்ளியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து, தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அங்கு தாய் முத்துமாரியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இருவருக்கிடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இதற்கிடைய முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்காள் கார்த்தீஸ்வரி தங்கையான முத்துவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்றதும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே முத்துவள்ளி தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி தான் நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×