search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை பெய்தால் போக்குவரத்து பாதிக்கும்: பழவேற்காடு பசியாவரம் தீவில் 20 ஆயிரம் பேர் தவிக்கும் அபாயம்
    X

    தொடர் மழை பெய்தால் போக்குவரத்து பாதிக்கும்: பழவேற்காடு பசியாவரம் தீவில் 20 ஆயிரம் பேர் தவிக்கும் அபாயம்

    • ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
    • பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    பழவேற்காடு ஏரி சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது.

    வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.

    பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது.

    இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.

    பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இந்த ஏரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

    வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

    இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது.

    கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும்.

    இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் தன்மையையும் உருவாக்குகிறது. ஆனால் பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    மழை இல்லாத காலங்களில் பழவேற்காடு தீவு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு பருவ மழையின் போது அதிகளவு மழை பெய்யும் என்பதால் அவர்கள் தீவில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    பழவேற்காடு தீவில் மொத்தம் 5 கிராமங்கள் உள்ளன. சாத்தான்குப்பம், எடமணி, எடமணி காலனி, ரகமத் நகர், பசியாவரம் ஆகிய 5 கிராமங்கள் கொண்ட அந்த தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 2 தொடக்கப் பள்ளிக்கூடங்கள் அங்கு உள்ளன.

    வழிபாட்டு தலங்கள், சாலைகள் எல்லாம் இருந்த போதிலும் அத்தியாவசிய தேவையான மருத்துவமனை அங்கு கிடையாது. இதனால் பழவேற்காடு தீவில் உள்ள 5 கிராம மக்களும் அத்தியாவசிய மருத்துவ சேவை மற்றும் பொருட்களுக்காக வெளியில்தான் வரவேண்டும்.

    பொதுவாக நவம்பர் மாதம் தீவை சுற்றி தண்ணீர் அதிகரிக்கும். அப்போது ஏரியில் இருந்து வெளியில் வருவது மிகவும் சிரமம். இதை கருத்தில் கொண்டு பழவேற்காடு ஏரியில் பிரமாண்டமான பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. சென்னை சாலையை இணைக்கும் வகையில் அந்த பாலத்தை கட்ட வரையறுக்கப்பட்டது.

    ஆனால் சுற்றுச்சூழல் காரணமாக பாலம் கட்டுவது நீண்ட நாட்களாக தடைபட்டு வந்தது. கடலோர ஒழுங்குப்படுத்தும் கழகத்தின் உத்தரவு கடந்த 2018-ம் ஆண்டு கிடைத்த பிறகு பாலம் கட்டுவதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் 2022-ம் ஆண்டுதான் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

    சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் அங்கு பாலம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி வழங்கி உள்ளது. ஆனால் நாளடைவில் திட்ட செலவு அதிகரித்தது. 432 மீட்டர் நீளத்துக்கும் சுமார் 9 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெல்ல நடக்கின்றன. இதன் காரணமாக பழவேற்காடு ஏரி தீவு மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

    வருகிற நாட்களில் அதிக மழை பெய்து தண்ணீர் பெருகி விட்டால் தீவு பகுதியில் உள்ள 5 கிராம மக்களும் வெளியில் வர முடியாமல் தவிக்க நேரிடும். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது 5 கிராம மக்களும் சுமார் 2 வாரங்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிட்டது.

    பாலம் கட்டும் பணி காரணமாக ஏற்கனவே மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக அந்த பாலம் கட்டும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழவேற்காடு பகுதி தீவு மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அந்த பாலத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×