search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு செந்தூரா மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
    X

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு செந்தூரா மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு

    • மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
    • வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழங்கள் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி , மேட்டூர், எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மா மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் ,மே மாதங்களில் மாம்பழ சீசன் களை கட்டும்.

    சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் வழக்கமாக 60 நாட்களுக்கு மேலாக களை கட்டும். அப்போது சேலம் மார்க்கெட்டுகள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள், தள்ளுவண்டிகளில் தெருவோர வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து வியாபாரம் செய்வார்கள். இதனால் எங்கும் சேலம் மாம்பழத்தின் மனம் வீசும்.

    தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் சேலம் உழவர் சந்தைகளுக்கும் மற்றும் பழ மண்டிகளுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் தினமும் அதிக அளவில் மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாம்பழம் லோடு வருகிறது.

    தற்போது மாம்பழம் வரத்து தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது கிளி மூக்கு, பங்கனப் பள்ளி, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, இமாம் பசந்த், ஆகிய மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    சேலம் ஏற்காடு ரோடு , அஸ்தம்பட்டி , செவ்வாய்ப்பேட்டை, கடை வீதி, பழைய பஸ் நிலைய கடை வீதி, புதிய பஸ் நிலையம் மற்றும் 5 ரோடு, ஜங்ஷன், அம்மாபேட்டை ,கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆன்லைன் மூலம் வியாபாரமும் தொடங்கியுள்ளது. வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆன்லைனில் புக்கிங் செய்து சேலம் மாம்பழத்தை வாங்கி ருசித்து வருகிறார்கள். இந்த வியாபாரம் இனி வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும்.

    இந்த மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிளி மூக்கு மாங்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் 5 டன் வரையும், மற்ற ரக மாம்பழங்கள் 3 டன் அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் 25 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் வர வாய்ப்புள்ளது. அப்போது மாம்பழங்களின் விலையும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் அதிக சுவை கொண்ட பிரசித்தி பெற்ற மல்கோவா மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மற்றும் பருவம் மாறிய மழையால் வரத்து குறைவால் வியாபாரிகள் பாதிப்படைந்த நிலையில் தற்போது மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியான நிலையில் வியாபாரம் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது . கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மாம்பழ சீசன் தற்போது படிப்படியாக வரத்து அதிகரித்து வருகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

    அதேபோல தற்போது வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். இன்னும் 15 நாட்களில் மாம்பழம் வரத்து உச்சம் பெறும். தொடர்ந்து 2 மாதங்களுக்கு மாம்பழம் விற்பனை அதிக அளவில் இருக்கும். தற்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் விலை குறையும் .இதனால் மாம்பழ விற்பனையும் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×