search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் பா.ஜனதா நிர்வாகி அதிரடி கைது
    X

    கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் பா.ஜனதா நிர்வாகி அதிரடி கைது

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    மதுராந்தகம்:

    மரக்காணம், சித்தாமூர் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை மொத்தம் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி அவரது மாமியார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா , மாரியப்பன் ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரணையை சேர்ந்த தம்பு, முத்து ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலி, ராஜீவ் உள்பட 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர் பா.ஜ னதா கட்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்தார். அவருக்கு கள்ளச்சாராயம் விற்ற கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? மெத்தனால் எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? சாராயம் தயார் செய்யப்பட்டதும் எந்தெந்த பகுதியில் விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?யார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக மேலும் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு ஆகிய 4 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான பா.ஜனதா நிர்வாகி விஜயகுமார் உள்பட 5 பேரையும் சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 6 பரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளசாராயம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×