search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்துவட்டி கொடுமை: மதுரை ஓட்டல் அதிபர் அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
    X

    கந்துவட்டி கொடுமை: மதுரை ஓட்டல் அதிபர் அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

    • மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர்.
    • கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை:

    மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 46). இவர் கே.புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் அதிபர் அழகுராஜா போலீசாரிடம் கூறுகையில், "நான் கே.புதூரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் அபிவிருத்திக்காக மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரிடமும் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கான வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் என்னிடம் மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் கந்து வட்டிக்கு ஈடாக, மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜாவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×