search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கி விவசாயி பலி
    X

    கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கி விவசாயி பலி

    • விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி காட்டுப் பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறி, கடந்த 25-ந் தேதி காவேரிப்பட்டிணம் பகுதிக்கு வந்தன. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த யானைகளை, வனத்துறையினர் காரியமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணை அருகேயுள்ள போலுகுட்டை பகுதியில் முகாமிட்டிருந்த இரு யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதனிடையே நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு இரு யானைகள் வந்தது.

    இந்த யானைகள் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்ற உற்சாக குளியல்போட்டு விளையாடின. மேலும், ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும், வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்குள் வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு அந்த 2 காட்டுயானைகள் ஏரியில் இருந்து வெளியேறி கிருஷ்ணகிரி நகரில் லைன்கொள்ளை பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×