search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூகுள் பே மூலம் வாரம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள்: அம்பலப்படுத்திய சாராய வியாபாரி
    X

    கூகுள் பே மூலம் வாரம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள்: அம்பலப்படுத்திய சாராய வியாபாரி

    • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் வியாபாரி தவித்தார்.
    • தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    மதுராந்தகம்:

    செய்யூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் இது நிற்கவில்லை.

    இதனால் செய்யூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 2 பேர் கூகுள் பே மூலம் லஞ்சமாக எவ்வளவு பணம் பெற்றனர் என்ற பட்டியல் வெளியாகி சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    அந்த சாராய வியாபாரியிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் வாரம் ரூ.1000 லஞ்சமாக கூகுள் பே மூலம் பெற்று இருக்கிறார்கள். இதன் பின்னர் வாரத்துக்கு ரூ.1,500 தர வேண்டும் என்று அந்த சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

    ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் அந்த வியாபாரி தவித்தார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த சாராய வியாபாரி இதுவரை சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் எந்தந்த தேதிகளில், எவ்வளவு பணம் லஞ்சமாக கூகுள் பே மூலம் அனுப்பினார் என்ற விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இந்த லஞ்ச பட்டியல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கிக் கொண்டு சாராய வியாபாரத்தை ஊக்குவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது அந்த சாராய வியாபாரி தலைமறைவாக உள்ளார். இந்த லஞ்ச பட்டியல், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சாராய வியாபாரத்துக்கு லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×