search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி- 17 பேர் படுகாயம்
    X

    வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி- 17 பேர் படுகாயம்

    • விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
    • விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.

    அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×