search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டுத்துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது
    X

    நாட்டுத்துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது

    • மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்
    • சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெள்ளி திருப்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான மாத்தூர், வட்டக்காடு, செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வட்டக்காடு பகுதியில் மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தினர்.

    இதில் அவர் கையில் வைத்திருந்த உரசாக்கில் மொசுகோந்தி வகை குரங்கின் தோல் உரித்த நிலையில் இரண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

    மேலும் விசாரணையில் அவர் சங்கராபாளையம் அருகே உள்ள காக்காயனூரை சேர்ந்த மாதன் என்கிற துரையன் (45) என்பதும், சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.

    மேலும் சாணிமடுவு வனப்பகுதியில் மொசுக்கோந்தியை சுட்டதாகவும் அதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்களை அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் வைத்துள்ளதாகவும், அதனை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாகவும் மாதன் தெரிவித்தார்.

    இதை அடுத்து மாதனை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×