search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் முதலிடம்
    X

    மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் முதலிடம்

    • தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
    • மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 12-ந்தேதி நிறைவடைந்தது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 199 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப் பட்டியலை இன்று காலை வெளியிட்டார். அதை மருத்துவ துறை செயலாளர் ககன்தீப்சிங் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்தும் அறிவித்தார்.

    கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,174 எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.

    அதே போல 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பி.டி.எஸ். இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

    இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 569 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அரசு ஒதுக்கீட்டில் முதலிடத்தை விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் பிடித்தார். இவர் நீட் தேர்விலும் 720-க்கு 720 பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    தரவரிசை பட்டியலில் மற்ற 9 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

    சூர்ய சித்தார்த் (715), எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், சென்னை.

    வருண் (715), ஸ்ரீ சைதான்யா டெக்னோ பள்ளி, சேலம்.

    சஞ்சனா (705), சுகுணா பி.ஐ.பி. பள்ளி, நாகமலை, கோவை.

    ரோசன் ஆன்டோ (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, திருவள்ளூர்.

    சஞ்சய் பிரகாஷ் (705), வேலம்மாள் வித்யாலயா மெயின் பள்ளி, சென்னை.

    கவியரசு (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, சேலம்.

    அபிஷேக் (705), சின்மயா வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி, சென்னை.

    லக்சன்யா அபிகேசவன் (705), விகாஸ் தி கான்செப்ட் பள்ளி, காஞ்சிபுரம்.

    தமிழினியன் (705), வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, பஞ்செட்டி, திருவண்ணாமலை.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களை படித்தவர்கள் விவரம் வருமாறு:-

    கிருத்திகா (569 மதிப்பெண்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

    பச்சையப்பன் (565), அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கரை, தருமபுரி.

    முருகன் (560), அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, மவுலிவாக்கம், காஞ்சிபுரம்.

    ரோஜா (544) அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

    அன்னபூரணி (538), அரசு மேல்நிலைப்பள்ளி, உலகம்பட்டி, சிவகங்கை.

    அர்ச்சனா (537), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

    அன்னபூரணி (533), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம், அரியலூர்.

    புகழேந்தி (531), அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

    கணேஷ் (530), வி.எம்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம், தேனி.

    சாம் (523), அரசு மேல் நிலைப்பள்ளி, காசி நாயக்கன்பட்டி, திருப்பத்தூர்.

    மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்காக 40 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3,994 அதிகம்.

    இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள்-36, இ.எஸ்.ஐ.-1, சுயநிதி மருத்துவ கல்லூரிகள்-21, நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரிகள்-13 என மொத்தம் 71 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 475 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2,150 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

    7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 473.

    7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 133.

    கவுன்சிலிங்கை பொறுத்தவரை ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள். அவ்வாறு நடத்தும்போது மாணவர்கள் மத்திய அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க சிரமம் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினோம்.

    இதையடுத்து மத்திய அரசு தொடங்கிய பிறகு தொடங்க அனுமதி தரப்பட்டது. மத்திய அரசு கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தொடங்கினால் 25-ந்தேதி தமிழகத்தில் கவுன்சிலிங் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×