search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

    • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×