search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் இன்று மாலை அமித் ஷா ரோடு ஷோ
    X

    மதுரையில் இன்று மாலை அமித் ஷா ரோடு ஷோ

    • சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத் தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்து றையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத் தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

    ரோடு-ஷோ நடைபெறும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில் வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர்.

    உள்துறை மந்திரி அமித் ஷா மதுரையில் இரண்டு முறை பிரசாரத்திற்கு திட்டமிட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திட்டம் உறுதி செய்யப்பட்டு மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் ரோடு-ஷோ நடைபெறவுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதைடுத்து இன்று மாலை சுவாமி வீதி உலா வரவுள்ள நிலையில் பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலை சுவாமி வீதியுலா வருவதால் அவர் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தற்போது அமித்ஷா சுவாமி தரிசனம் செய்வது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×