search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் கலப்பால் கருப்பாக மாறிய வடசென்னை கடல்- மீனவ கிராம மக்கள் பாதிப்பு
    X

    கழிவுநீர் கலப்பால் கருப்பாக மாறிய வடசென்னை கடல்- மீனவ கிராம மக்கள் பாதிப்பு

    • கடல் உயிரினங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • கடலில் கழிவு நீர் கலந்து வருவது பல ஆண்டுகளாக உள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னையின் அடையாளமாக மெரினா கடற்கரை உள்ளது. இதே போல் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையேயான கடற்கரையில் ஒரு பகுதியை ரூ.100 கோடியில் மேம்படுத்தி அழகுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் சென்னைக்கு மேலும் ஒரு பொழுது போக்கு கடற்கரை வசதி கிடைக்கும். இது தொடர்பான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

    இந்த புதிய கடற்கரையில் மெரினாவில் உள்ளதை போல் நடைபாதை, பெஞ்சுகள், யோகாவசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உணவுக்கடைகள், சைக்கிள் பாதை போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் திருவொற்றியூரை சுற்றி உள்ள வடசென்னை பகுதிகளின் முகம் மாறி மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் அருகே சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கடலில் கலக்கப்படுவதால் தண்ணீர் கருப்பு நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடல் உயிரினங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன் நகர், தேசிய நகர், நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அருகில் உள்ள மீன்பிடி கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்படியே திருவொற்றியூர் அருேக நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதி கடற்கரைக்கு விடப்படுகின்றன. இந்த கழிவு நீர் கடலில் தொடர்ந்து கலந்து வருவதால் அந்த கடற்கரை பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் கலப்பால் எண்ணூர், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இதன்பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் திருவொற்றியூர் மஸ்தான்கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சூறை மீன்பிடி துறை முக பகுதியில் கலந்து வருகிறது. தற்போது இந்த சூறை மீன் பிடி துறைமுகம் ரூ.200 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் கழிவு நீர் கலந்து வருவதால் மீன்பிடி துறைமுகம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே மாசு அடைய தொடங்கி உள்ளது.

    எல்லையம்மன்கோவில் தெருவை சுற்றி உள்ள பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கிளிஜோசியம் நகர் அருகே கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து கழிவு நீர் கலப்பால் கடல் நீர் மாசு அடைந்து அந்த கடற்கரையையே மீனவ கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி உள்ளது.

    இதற்கு அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்காததே காரணம் என்று தெரிகிறது. சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு இருந்தாலும் கழிவு நீர் கடலில் சென்று கலக்கும் வகையில் திருப்பி விடப்பட்டு உள்ளன.

    எனவே கடல் மாசை தடுத்து கழிவு நீர் செல்ல முறையாக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து காசிமேடு மீனவர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    கடலில் கழிவு நீர் கலந்து வருவது பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடல் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடசென்னையில் 40-க்கும் மேற்பட்ட மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இருப்பதால், மெரினா போன்று கடற்கரைகள் இல்லை. இதனால் இங்குள்ள கடற்கரை புறக்கணிக்கப்படுகிறது.வடசென்னை நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகள் நீண்ட காலமாக யாரும் கண்டு கொள்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திருவொற்றியூர் அருகே கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கே.ஆர். ராமசாமி தெருவில் இருந்து கிளிஜோசியம் நகர் வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் பாதை அமைக்கப்படுகிறது. இது கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்றடையும். இதற்காக சாலையில் பள்ளம் தோண்டும் பணிக்கு தேசிய நெஞ்சாலை அனுமதி தரவில்லை. இதனால் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.விரைவில் இதற்கான பணி தொடங்கப்படும் என்றார்.

    திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கட்டையா கூறும்போது. "எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகள் சென்னை மாநகராட்சி பகுதியாக மாறிவிட்டபோதும் இன்னும் அடிப்படை வசதியான பாதாள சாக்கடை இணைப்புகள் முறையாக கொடுக்கப்படாமல் உள்ளது. எண்ணூர், பெரிய குப்பம் ,திருவொற்றியூர், கிளி ஜோசியம் நகர், மஸ்தான் கோவில் குப்பம், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கடல் நீரில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கடல் நீர் மாசு அடைந்து கரையோரம் பிடிக்கப்படும் மீன்களும் விஷத்தன்மையாக மாறிவருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×