search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் மோதல்: குடும்பத்துடன் கிராமத்தை காலி செய்த மீனவர்கள்
    X

    பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் மோதல்: குடும்பத்துடன் கிராமத்தை காலி செய்த மீனவர்கள்

    • பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
    • இன்று கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே கூனங்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மீனவர்கள் பகுதியான ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் கிராம மக்களும் இதே ஏரியில் இறால் மட்டும் பிடித்து வருகின்றனர்.

    இதனால் இவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மீன், நண்டு பிடிப்பதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    கூனங்குப்பத்தை சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிக்கக்கூடாது என்று தடை விதித்து மற்ற 3 மீனவ கிராம மக்களும் வலைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமமக்கள் போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பம் மற்றும் கூனங்குப்பம் கிராமமக்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனால் கூனங்குப்பம் கிராமமக்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளிடம் மீண்டும் தெரிவித்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி கூனங்குப்பம் கிராமமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து விட்டு குடும்பத்துடன் நடைபயணமாக திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்தபடி புத்தக பையுடன் நடந்து வந்தனர். மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்காக ஆதார்அட்டை, ரேசன் கார்டு மற்றும் மீன்பிடி வலையுடன் வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டார் மடம் அருகே கூனங்குப்பம் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரிடம் கிராமமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராமமக்கள் தொடர்ந்து தங்களது நடைபயணத்தை தொடர்ந்தனர்.

    இதற்கிடையே சுமார் 7 கி.மீட்டர் தூரம் வரை நடந்து வந்த மீனவ கிராம மக்களிடம் வஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வக்குமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் ஆகியோர் அழைத்தனர்.

    இதனை ஏற்று காலை 10 மணியளவில் மீனவ கிராம மக்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மற்ற கிராமமக்கள் எங்க ளுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வஞ்சிவாக்கம் பகுதியில் நடைபயணம் செய்த மீனவர்கள் திடீரென பழவேற்காடு-செங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களையும் சிறைபிடித்தனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களே மறியலை கைவிட்டு போக்குவரத்தை அனுமதித்தனர்.

    பேச்சுவார்த்தை நடந்து வரும் வஞ்சிவாக்கம் பகுதியில் கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் திரண்டு இருந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    டி.எஸ்.பி.கிரியாசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் அசம்பாவிதத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் காலம்காலமாக பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடித்து தொழில் செய்து வருகிறோம். தற்போது ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதா குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் நாங்கள் தொழில் செய்வதை தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மீனவ கிராமமக்கள் உள்ளனர். எங்களது வலைகளையும் அவர்கள் எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் நாங்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு, மீன் பிடித்து தொழில் செய்யமுடியாத சூழல் நிலவுகிறது.

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

    எங்களுக்கு பழவேற்காடு ஏரியில் மீன், நண்டு பிடிப்பதில் உள்ள பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும். அதுவரை நாங்கள் போக மாட்டோம். எங்களுக்கு முடிவு தெரியவேண்டும்.

    இவ்வாறு ஆவேசமாக அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சுமார் 2 மணிநேரம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கிய தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூனங்குப்பம் கிராமமக்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மதியம் 12 மணிக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    பொன்னேரி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் வைத்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவ கிராம மக்களுடன் நாளை தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தால் பழவேற்காடு பகுதி இன்று காலை பெரும்பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×