search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்- தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு 12-ந்தேதி வாக்குசீட்டு வருகிறது
    X

    ஜனாதிபதி தேர்தல்- தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு 12-ந்தேதி வாக்குசீட்டு வருகிறது

    • எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்.
    • எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 4,809 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 233 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்கள், 545 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கும்.

    இதில் தமிழகத்தில் இருந்து 234 எம்.எல்.ஏ.க்கள், 39 பாராளுன்ற உறுப்பினர்கள், 18 ராஜ்ய சபா எம்.பி.க்கள் ஓட்டு போட உள்ளனர்.

    இதில் எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்குச் சீட்டுகளை வாங்கி வருவதற்காக சட்டசபை செயலக அதிகாரி 11-ந்தேதி விமானத்தில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் ஓட்டு பெட்டி மற்றும் ஓட்டு சீட்டுகளை பெற்று 12-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் சென்னை திரும்புகிறார்.

    விமானத்தில் தனி இருக்கையில் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். சட்டசபை செயலக வளாகத்தில் தனி அறையில் ஓட்டுப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை சீல் வைக்கப்படும். ஓட்டுப் பதிவு அன்றுதான் பெட்டி வெளியில் எடுக்கப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்று மாலையே உரிய பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    எம்.பி.க்கள் வாக்களிக்க பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×