search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூன்றே நாளில் முடித்து வைத்த மக்களுடன் முதல்வர் திட்டம்- விவசாயி
    X

    மூன்றே நாளில் முடித்து வைத்த "மக்களுடன் முதல்வர்" திட்டம்- விவசாயி

    • தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
    • மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன்.

    இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடந்த 1988-ம் ஆண்டில் 21 செண்ட் நிலத்தை கிரயம் வாங்கினார். பின்னர் இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யும் நடவடிக்கையில் சந்திரசேகரன் ஈடுபட்டு வந்தார். ஆனால் 35 ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இனி நம்மால் பட்டா மாற்றம் செய்யவே முடியாது என்ற விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைதீர்க்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.

    அதன்படி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இதனை அறிந்து சந்திரசேகரன் தனது 35 ஆண்டுக்கால எதிர்பார்ப்பான பட்டா மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.

    அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் தாலுகா அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. இந்த தகவலை இணையத்தின் மூலம் அறிந்து விவசாயி சந்திரசேகரன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

    அதாவது முகாமில் வழங்கிய விண்ணப்பம் மீது அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கபட்டுள்ளது.

    35 ஆண்டுக்கால பிரச்சினையை வெறும் மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தீர்வு கண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதை எண்ணி அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    இதனால் அவர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்புகள், பயன்கள் குறித்து மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    Next Story
    ×