search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரர் குறித்து உருக்கமான தகவல்கள்
    X

    ராணுவ வீரர் கமலேஷ்.

    துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரர் குறித்து உருக்கமான தகவல்கள்

    • வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நங்கவள்ளி:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.

    கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.

    வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×