என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
- மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டிதீர்த்தது. இன்று காலையும் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் சூழும் பகுதிகளுக்கு செல்ல படகு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வெள்ளத்தை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புவனகிரியை சுற்றியுள்ள ஆதிவராக நத்தம், மஞ்சகுழி, பெருமாத்தூர், சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, வண்டு ராயன்பட்டு, உடையூர், கீரப்பாளையம், வடகறி ராஜபுரம், ஒரத்தூர், தெற்கு திட்டை, வடக்குதிட்டை, பு.சித்தேரி, சாத்தப்பாடி ஆகிய பல்வேறு கிராமங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.