என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெயினருவியில் இன்று காலை ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணை பகுதிகளில் தொடர்மழை
- மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 73.65 அடியாக உயர்ந்துள்ளது.
- அணைக்கு 609 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணை பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டித்தீர்த்தது.
பாபநாசத்தில் 40 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வினாடிக்கு 1916 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1204 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 73.65 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு 609 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 38 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய், மூலக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியில் பெய்த மழையால் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.
பாளை ராஜேந்திரன் நகரில் வீட்டின் மீது இன்று காலை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. ஒரு சில இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது. அதனை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இதமான சூழ்நிலை நிலவுகிறது. கடனா நதி, ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி ராமநதியில் 20 மில்லிமீட்டரும், குண்டாறில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.






