search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும், குழியுமான சாலையில் வாகனம் சிக்கி ஓய்வுபெற்ற பெண் ஊழியர் பலி
    X

    குண்டும், குழியுமான சாலையில் வாகனம் சிக்கி ஓய்வுபெற்ற பெண் ஊழியர் பலி

    • எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
    • சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.

    இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.

    கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.

    அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

    பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×