search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    80 பவுன் நகை கொள்ளை வழக்கில் நெல்லை வாலிபர் கைது
    X

    80 பவுன் நகை கொள்ளை வழக்கில் நெல்லை வாலிபர் கைது

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.

    அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×