search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்கக்கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்
    X

    வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்கக்கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்

    • தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை.
    • பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.

    மதுரை:

    நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சாட்டை துரைமுருகன். அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து யூடியூப் மற்றும் கட்சி பொதுக்கூட்டங்களில் விமர்சித்து வரும் சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அவதூறு வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சாட்டை துரைமுருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுத்தனர். இதற்கிடையே இந்தாண்டு ஜூலை மாதம் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்த நிலையில் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

    தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை. அதனை நான் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறேன். நான் வெளிநாட்டில் குடியேற பாஸ்போர்ட் கேட்கவில்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்னை உரையாற்ற அழைக்கின்றனர். இருப்பினும் பாஸ்போர்ட் இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை.

    பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த தனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்டை துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×