search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்- செங்கோட்டையன்
    X

    அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்- செங்கோட்டையன்

    • விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அ.தி.மு.க.வின் மக்கள் சக்தியாக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது.

    ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் தி.மு.க. வேதனை அரசாக உள்ளது. விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது. கடலை அணை கட்டி தடுக்க முடியாது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.

    உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

    எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×