என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கோடை மழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    குன்னூரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கோடை மழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

    • தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர்.
    • சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் இதமான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு, இருளாக காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    மாலையில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குன்னூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் சாலையில் செல்லும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை மெதுவாகவே இயக்கி சென்றனர். சில வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால், குன்னூர் அய்யப்பன் கோவில் பகுதி, இன்கோசர்வ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடின.

    குன்னூர் பஸ் நிலையம் முன்பு பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்ட கழிவு பொருட்கள் தேங்கி அந்த பகுதியே சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

    இதேபோல் குன்னூர் புறநகர் பகுதிகளான பர்லியார், வண்டிச்சோலை, ஒட்டுப்பட்டரை உள்பட கிராம பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    திடீரென கொட்டி தீர்த்த மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×