search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த உயரமுள்ள விலங்குகளை வளர்க்கும் ஓவிய ஆசிரியர்
    X

    குறைந்த உயரமுள்ள விலங்குகளை வளர்க்கும் ஓவிய ஆசிரியர்

    • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
    • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

    குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

    இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


    இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

    இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

    Next Story
    ×