என் மலர்
உள்ளூர் செய்திகள்
போகி புகைமூட்டம்: மதுரவாயல் பைபாஸ் சாலையில் பூக்கள் ஏற்றிய வேன் கவிழ்ந்து விபத்து
- விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
- விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.