search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய சமூகவியல் மாநாடு
    X

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய சமூகவியல் மாநாடு

    • டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான சமூகவியல் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக மிகை உலகமயமாக்கலின் விளைவுகளாக அதிக துருவ முனைப்பு, அரசியலின் சீரழிவு போன்றவை பார்க்கப்படுகிறது. இந்த சீரழிவு, பிளவு சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற உதவியிருக்கலாம்.

    உக்ரைன், காசா போன்ற ஆயுத மோதல்களால் தொலைந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. போன்ற பெரியநிறுவனங்கள் சிதைவதற்கும் அரசியல்வாதிகளால் வழி வகுத்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சமத்துவமின்மை, துருவ முனைப்பு போன்ற சவால்களுக்கு சமத்துவமான சமுதாயத்தை உறுதி செய்வதற்கு சமூகவியலாளர்கள் தீர்வு காண வேண்டும்.

    அதிக உலகமயமாக்கல் ஒரு நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே செல்வத்தின் தீவிர ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய ஏற்றத் தாழ்வை அரசின் நலத் திட்டங்கள், முன் முயற்சிகளால் மட்டுமே குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

    உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பாக இருந்தாலும், தனி நபர் வருமானத்தில் 139-வது இடத்தில் இருக்கிறது. நாம் விவசாயநிலங்களை இழந்து வருகிறோம். அதை தவிர்க்க வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். சமத்துவமின்மையால் இந்தியா மோசமான நாடாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் இந்திய சமூகவியல் சங்கத் தலைவர் ஆபா சவுஹான், செயலர் மணீஷ் வர்மா, வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த் தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×