என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே 200 பாக்குமரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து காட்டு யானைகள் அட்டகாசம்
- யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சியில் உள்ளது புளியமர தோப்பு கிராமம்.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாக்கு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானைகள், பன்றி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பாக்கு, தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
குறிப்பாக பாக்கு மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புளியமர தோப்பு கிராமத்தை சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் கோவர்த்தனனின் தோட்டத்திற்கு புகுந்தது.
அங்கு பயிரிட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தோட்டதிற்கு வந்த கோவர்த்தனன் பாக்கு பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு கவலை அடைந்தார்.
தொடர்ந்து இந்த பகுதியில் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது விவசாயிகளிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளைநிலங்களுக்குள் புகும் யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்தில் விலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் இல்லாத காரணத்தாலேயே அவை ஊருக்குள் வருகின்றன. எனவே வனத்திலேயே வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






