என் மலர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- தொழிலாளி கைது
- ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர்.
- மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.
அதில் எதிர்புறம் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெட்டி வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா என சோதனை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர்.
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாக இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரெயிலிலும் போலீசார் சோதனை நடத்தினர். அந்த ரெயில் புறப்பட்டு செல்லும் வரை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதன் சிக்னல் குரும்பூரை காட்டியது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 42) என்பது தெரியவந்தது.
அவரை குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கணேசமூர்த்திக்கு மனைவி மற்றும் 1 மகன் இருப்பதும், அவர் வெல்டிங் பட்டறை தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திய கணேசமூர்த்தி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் விளைவிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தியை கைது செய்தார்.