search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதவுவது போல் நடித்து தலைமை ஆசிரியை உள்பட 5 பேரிடம் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது
    X

    உதவுவது போல் நடித்து தலைமை ஆசிரியை உள்பட 5 பேரிடம் நூதன மோசடி செய்த இளம்பெண் கைது

    • திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    • திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார்.

    மதுரை:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த 24 வயதுடைய பெண் கோபாலுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

    இதனை நம்பிய அவர் தான் கொண்டு வந்திருந்த ரூ. 15 ஆயிரத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் கோபாலிடம் பணத்தை டெபாசிட் செய்துவிட்டதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற கோபாலுக்கு பணம் டெபாசிட் செய்தது தொடர்பான குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை. இதனால் கோபால் உடனே குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது, பணம் டெபாசிட் செய்யவில்லை என தெரியவந்தது.

    இளம்பெண் முதியவரை ஏமாற்றி ரூ. 15 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார் (தல்லாகுளம்), சூரக்குமார் (அண்ணா நகர்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் முதியவரின் பணத்தை திருடியது தெரியவந்தது.

    இதேபோல் தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தர் (41) என்பவரும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரிடம் இளம்பெண் ஒருவர் நைசாக பேசி ரூ. 19 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

    கரும்பாலை சோனையர்கோவில் தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரிடமும் மர்மநபர் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

    மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜெனட் மேரி (63). அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 17-ந் தேதி குருவிக்காரன் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஜெனட் மேரிக்கு உதவுவது போல் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 69 ஆயிரத்தை திருடியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் கீழக்கோவிலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி போஸ் என்பவரும் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் 16 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபரிடம் பறி கொடுத்தார். 5 பேரிடமும் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை இளம்பெண் திருடியுள்ளார்.

    மேற்கண்ட 5 ஏ.டி.எம். பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டம் கொண்டமாணிக்கம்பட்டி மன்னர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி மணிமேகலை (24) என்பவர் முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்து கைதான பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×