search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்- தமிழச்சி தங்கபாண்டியன்
    X

    ரெயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்- தமிழச்சி தங்கபாண்டியன்

    • தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி, தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தியாகராயர் நகரில், 142-வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன்; செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.

    இதனிடையே, ரெயில்வே துறையில் தொகுதிக்காக நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் உள்ள ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019-ல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.

    ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரெயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது. தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது; வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரெயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது; மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன் என கூறினார்.

    Next Story
    ×