search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட்டு சென்ற விசைப்படகு மீனவர்கள்
    X

    சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு புறப்பட்டு சென்ற விசைப்படகு மீனவர்கள்

    • விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.

    Next Story
    ×