search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ள சேத பாதிப்பு- நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினார் முதலமைச்சர்
    X

    வெள்ள சேத பாதிப்பு- நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினார் முதலமைச்சர்

    • எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
    • மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.

    விழுப்புரம்:

    பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலு வலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார்.

    சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் முதலில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவற்றை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

    அப்போது முதல்-அமைச்சரிடம் பெண் அதிகாரி கூறியதாவது:-

    இந்த பகுதியில் தோப்புக்கு ஒரு வீடு வீதம் நிறைய உள்ளது. மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்களும் சாய்ந்து விட்டது.

    2 நாட்களாக அவற்றை சரி செய்து வருகிறோம். மின் கம்பங்களை சரி செய்ய ஊழியர்கள் குறைவாக இருந்தார்கள். இன்று கூடுதல் ஊழியர்கள் வந்துள்ளார்கள் என்றார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி அமுதா, கலெக்டர் அருண்ராஜ் ஆகியோரும் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புடவை, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம் ரெட்டியார் மில்லில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக்கு லேஷன் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மரக்காணத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்த்துக்கொண்டே சென்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டரும் உடன் சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்டமும் சென்றார். திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டார்.

    உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    Next Story
    ×