என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்: அமித்ஷா உருவப்படம் தீயிட்டு எரிப்பு
- அமித்ஷா படத்தை கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர்.
- அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கண்டித்து ஒசூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் எம்.ஜி.ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென அமித் ஷாவின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர், கட்சியினரிடமிருந்து படத்தை கைப்பற்ற முயன்றார்.
ஆனால் கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு, சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி, அமித் ஷாவின் படத்தை முழுவதுமாக எரித்தனர்.
மேலும், அவரது படத்தை கீழே போட்டு கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், ஜீபி கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.