search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற உலக முருக பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்
    X

    பழனியில் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற உலக முருக பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

    • 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
    • வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு

    பழனி:

    பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட்டு 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் முருகன் கோவில்களை நிர்மானித்துள்ள அறங்காவலர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்கும் இடம் இலவசமாக வழஙகப்படுவதுடன் உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடைபெறும். மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவிலில் ரூ.98 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக பழனி, திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட்டு 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முன் பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பழனி வந்தார்.

    அதிகாலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானக் கூடம், பிரசாத ஸ்டால் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அதன் பின்பு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கினார். மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×