search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குடும்பம் குடும்பமாக படை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள உணவு மற்றும் பழக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதோடு பலாப்பழங்களை வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.

    இன்று வானம் மேகமூட்டத்துடனும், விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.

    • தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள். 

    • வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார்.
    • சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    அதன்படி நேற்று மாலை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இரவு வரையிலும் தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து குற்றாலம் சென்று ஓய்வெடுத்தார்.

    இந்நிலையில் 2-வது நாளான இன்று மாலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் சசிகலா தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

    தொடர்ந்து செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைகால், கடையநல்லூர், திரிகூடபுரம் வழியாக சொக்கம்பட்டியில் இன்றைய சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். இன்று மொத்தம் 17 இடங்களில் சசிகலா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

    நேற்று தனது முதல் நாள் பயணத்தின்போது சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டார். சசிகலா தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் சசிகலாவின் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனங்களிலும் அ.தி.மு.க. கொடிகளே கட்டப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.

    மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது. 

    • குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்தது.

    அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் ராஜ், தீபன் குமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேசன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரியுடன் அதில் இருந்த 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த லாரியின் டிரைவர் அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் அருவிகளில் வெள்ளத்தின் சீற்றம் சற்று குறைந்துள்ளதால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தண்ணீரின் சீற்றம் குறையும் பட்சத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுந்தரபாண்டியபுரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தென்காசி:

    அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் நாளை (புதன்கிழமை) முதல் மக்களை சந்திக்க உள்ளார்.

    முதலாவதாக அவர் நாளை தென்காசி மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு தென்காசிக்கு வரும் சசிகலா, குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதியில் தங்குகிறார்.

    அதனைத்தொடர்ந்து நாளை மாலை 3 மணி அளவில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். காசிமேஜர்புரத்தில் தொடங்கி இலஞ்சி, தென்காசி நகர், கீழப்புலியூர், மேலப்பாட்டாக்குறிச்சி ஆகிய இடங்களில் மக்களை சந்திக்கிறார்.

    சுந்தரபாண்டியபுரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, சுரண்டை, குருங்காவனம், வி.கே.புதூர், வீராணம், ஊத்துமலை ஆகிய இடங்களில் மக்களை சந்திக்கிறார்.

    2-வது நாளாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 19-ந்தேதி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும், 20-ந்தேதி வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.

    இதனையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சசிகலா வருகையையொட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.

    நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

    இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது.
    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, தென்காசி நகரம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. சிறிது நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.

    இன்று காலையில் மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் புலி அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் இன்று காலை சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காலை முதலே அதிகமாக காணப்பட்டது.

    • மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் ஊரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிள்ளையார் பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    அதில் தென்னை, மாமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த தோட்டத்தின் காவலாளியாக சொக்கம்பட்டி அருகே உள்ள வளையல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூக்கையா என்பவர் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவர் சுமார் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சமீப காலமாக தோப்பு அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரவில் தொடர்ந்து யானை வந்து கொண்டி ருந்தது. இதனால் இரவிலும் தோட்டத்தை காவல் காக்க வேண்டும் என்பதற்காக தோட்டத்தின் உரிமையாளர் பிள்ளையார் பாண்டி நேற்று இரவு மூக்கையாவை அழைத்துக்கொண்டு தோப்பிற்கு சென்றார்.

    அங்கு மூக்கையா இரவு காவல் பணியில் இருந்த போது தோட்டத்துக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. உடனே அதனை அவர் விரட்டினார்.

    அப்போது யானை, மூக்கையாவை துரத்தியது. உடனே அவர் பதறியபடி ஓடியபோது தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் அவரை துரத்தி வந்த யானை மூக்கையாவை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட பிள்ளையார் பாண்டி அங்கு இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் மூக்கையாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மூக்கையாவின் மனைவி மற்றும் அவரது 3 மகள்களுடன் சேர்ந்து ஊர் மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அங்கு சென்று மறியலுக்கு திரண்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சாட்டை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×