search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
    X

    கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

    • அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் குறைய வாய்ப்பில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பல்லாயிரம் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன.முதல் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் குடிநீர் பெற 1965ம் ஆண்டும், 2வது திட்டம் மூலம் 3 கோடி லிட்டர் குடிநீர் பெற 1993ம் ஆண்டிலும் திட்டமிடப்பட்டது.

    இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் 3வது குடிநீர் திட்டத்தில் தினமும் 10 கோடி லிட்டர் அளவும் குடிநீர் பெறப்படுகிறது. இது பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது முதல் மற்றும் 2வது குடிநீர் திட்டங்களில் குடிநீர் குறைந்துள்ள நிலையில், வீட்டு இணைப்புகளுக்கு இதன் மூலம் தற்போது பெருமளவு குடிநீர் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இது பயன்பாட்டுக்கு துவங்கும் வகையில் வெள்ளோட்டம் நடந்தது.இதன் மூலம் தற்போது வடக்கு பகுதியில் முதல் கட்டமாக 12 மேல் நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் இத்திட்டத்தில் கட்டடப்பட்டு வரும் மீதமுள்ள தொட்டிகளுக்கும் நீர் ஏற்றி வினியோகம் துவங்கப்படும்.

    இப்பணி காரணமாக கடந்த இரண்டாண்டு காலமாக முழுமையாகவே முதலாவது குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீடு, வணிக மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு பகுதி வாரியாக ஒரு வாரம் முதல் 10 நாள் இடைவெளியிலும், சில பகுதிகளில் 12 முதல் 14 நாள் என்ற கணக்கிலும் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இந்த நிலை கோடைக்காலம் துவங்கினால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கருதுகின்றனர். பல பகுதிகளில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வீணாகிறது. இதனால் குடிநீர் வினியோகத்தில் சிரமம் நிலவுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது 2 மற்றும் 3வது குடிநீர் திட்டத்தில் தேவையான அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர மாநகராட்சி அமைத்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ் குழாய் கிணறுகள் மூலம் உரிய பகுதிகளில் தண்ணீர் சப்ளையாகிறது. மேலும் இதற்கான தேவை உள்ள பகுதிகள் ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

    முடிந்த வரை குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் குடிநீர் சப்ளை திட்டமிட்டு வழங்கப்படுகிறது. இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 3 கோடி லிட்டருக்கு பதிலாக 2 கோடி லிட்டர் அளவு மட்டுமே குடிநீர் வருகிறது. இருப்பினும் மூன்றாவது திட்டத்தில் குடிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதை எதிர்கொள்ள முடிகிறது.பணிகளால் சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளையில் இடைவெளி ஏற்படுகிறது.

    இதை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். பராமரிப்பு பணிகளால் நீரேற்றும் மையங்களில் தடை ஏற்பட்டாலும் அதை சரி செய்யும் விதமாக திட்டமிட்டு சப்ளை செய்யப்படுகிறது.

    ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் ஓரளவு தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது. குடிநீர் திட்டப்பகுதியில் தற்போது நீராதாரம் தேவையான அளவு உள்ளதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

    மேலும் தற்போது நீர் உறிஞ்சும் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறத்தாழ 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும் போது, நீர் ஆதாரம் குறையாமல் இருக்கும். இதன் மூலம் குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×