என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருநெல்வேலி
- விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது.
- ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
வி.கே.புரம்:
நடிகர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக மட்டுமின்றி, விஜயை தனது மகனாகவே பாவித்து வாழ்ந்து வருகிறார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 65). இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.
கணவரை இழந்த நிலையில் வள்ளியம்மாள் தனது மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார். வள்ளியம்மாள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார்.
விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியானது. அப்படத்தை பார்த்த வள்ளியம்மாள் அன்று முதல் விஜய்யின் நடிப்பு பிடித்து அவரது ரசிகையாக மாறினார்.
1993-ம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தையும் திரையில் பார்த்த வள்ளியம்மாள் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறத் தொடங்கினார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களை ஒன்று விடாமல் தியேட்டரில் சென்று பார்த்து வந்துள்ளார்.
விஜய்யின் திரைப்படம் ஒரு தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ, அதுவரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளியம்மாள் தவறாமல் அந்த படத்தை பார்த்து வருகிறாராம்.
விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள் தனக்கு விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 2 மகன் அதில் நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன் என்று கூறி வருகிறார். இதன் காரணமாகவே ஊருக்குள் வள்ளியம்மாள் பாட்டியை விஜய் வள்ளியம்மாள் என்று அழைத்து வருகின்றனர்.
விஜய்யின் நினைவாக வள்ளியம்மாள் பாட்டி வீட்டில் ஆங்காங்கே விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளார்.
தனது வீட்டு பீரோவில் விஜய்யின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை பத்திரப்படுத்தி வருகிறார். விஜய் மீது தீராத அன்பை வள்ளியம்மாள் பாட்டி செலுத்தி வருகிறார்.
வள்ளியம்மாள் கூறும் போது, நடிகர் விஜய் தான் எனக்கு தலைமகன். செந்தூரபாண்டி படம் பார்த்ததில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை.
விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ளேன். சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் தான். இருந்தாலும் அவர் அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதலமைச்சரோடு நின்று விடாமல் பிரதமராக வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.
- கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 17).
முத்துலெட்சுமி 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் 2-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முத்துலெட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
- விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரண மாக பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தின்போது நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.
கடந்த வாரம் பாபநாசம் அணையில் இருந்து பாச னத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 கால்வாய்கள் மூலம் நிலப்பரப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் 93.30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து 1004 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
தற்போது பாபநாசம், வி.கே.புரம், அம்பையில் தொடங்கி சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், கல்லிடைக்குறிச்சி, கோபால சமுத்திரம், மேலச்செவல், சீவலப்பேரி வரையிலும் விவசாயிகள் தங்களது வயல்களை நெல் சாகுபடிக்கு பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் தொழி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 3.5 மில்லிமீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.சிவகிரி, வாசுதேவநல்லூர், உள்ளாார், ராயகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக பிசான பருவ நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இந்த 2 இடங்களிலும் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாநகர பகுதியிலும் சாரல் அடித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 27 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், கழுகுமலை, சாத்தான்குளம் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை அடித்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
- மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு உடையவர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 50). இவரது மகன் மாரிசெல்வன். அதே பகுதியில் வசித்து வருபவர் மண்டையன் பெருமாள். தொழிலாளி.
இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவரது மகன்கள் மருது என்ற சுடலைமணி(வயது 27), லெட்சுமணன், கொம்பையா என்ற கார்த்தி(20). இதில் சுடலைமணி டிரைவராகவும், மற்ற 2 பேரும் விவசாய தொழிலாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக பரமசிவம் குடும்பத்தினருக்கும், மண்டையன் பெருமாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அடிக்கடி ஒருவரையொருவர் முறைத்து பார்த்து கொள்வதும், பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பரமசிவம் சாப்பிட்டு முடித்துவிட்டு காற்று வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே தனது மகன் மாரிசெல்வத்துடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரது உறவினரான விக்கி என்பவரும் அவர்களுடன் நின்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, கார்த்தி, லெட்சுமணன் மற்றும் அவரது மருமகன் முருகபெருமாள் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து 2 தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அவரது மகன் மாரிசெல்வனுக்கும், விக்கிக்கும் வெட்டு விழுந்தது. இதனிடையே பதிலுக்கு மாரிசெல்வன் அரிவாளால் வெட்டியதில், முருகபெருமாளுக்கு வெட்டு விழுந்தது.
இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த மண்டையன் பெருமாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பேட்டை போலீசார் பரமசிவம் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த 4 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கோஷ்டி மோதலில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார்.
- மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன் (வயது 35). இவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருடன் சகஜமாக பழகி வந்துள்ளார்.
மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு செல்லும் ஆனந்த கலைச் செல்வன், ஆபாசமாக பேசி வந்துள்ளார். பாலியல் ரீதியில் அந்த மாணவியிடம் பேசி, ஏமாற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த மாணவி குறித்த வீடியோக்களை தனக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்ப சொல்லி உள்ளார். மாணவியும் அந்தரங்க வீடியோக்களை போலீஸ்காரருக்கு அனுப்பி உள்ளார்.
அந்த மாணவி வசதியான வீட்டை சேர்ந்தவர் என்பதால், அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு ஆனந்த கலைச்செல்வன் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். முதலில் வேறு வழியின்றி பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்து வந்த மாணவி, ஒருகட்டத்தில் ஆனந்த கலைச்செல்வனின் தொந்தரவு தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தீவிர விசாரணை நடத்தி வந்தார். இதில் மாணவியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த உறுதியானது. மேலும் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர்நேற்று இரவு ஆனந்த கலைச்செல்வனை கைது செய்ய, போலீசார் கே.டி.சி. நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் இரவு பணிக்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆனந்த கலைச்செல்வனை கைது செய்தனர்.
- அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
- ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. அதன்படி நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை படு ஜோராக நடந்தது. வியாபாரிகள் ஆடுகளை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்றுச் சென்றனர். செவ்வாய்கிழமை தோறும் நடக்கும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைக்கட்டியது.
இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு செல்வோர் மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை விலைபேசி வாங்கி சென்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மட்டுமல்லாமல் தேனி, மதுரை மற்றும் கேரளா வியாபாரிகளும் வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகாலையில் தொடங்கி 10 மணி வரையிலும் மேலப்பாளையம் ரவுண்டானா வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி தரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என இருவகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், இறைச்சிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர். ஆட்டின் உயரம், எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று சுமார் ரூ.3 கோடி வரை விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
- சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அய்யனு. இவரது மகன் முருகானந்தம் (வயது 30).
இவர் கடந்த ஆண்டு சிவகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 105 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை வார்டன்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகானந்தம் இறந்துவிட்டார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு.
- விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
நெல்லை:
நடிகர் பிரபு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ஆசியும், எனது ஆதரவும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசீர்வதிக்கிறேன்.
விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவர் அவர் கூறினார்.
- 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மனைவி செல்வராணி (வயது 57). இவர் சம்பவத்தன்று திசையன்விளை பொம்மிநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதா லெட்சுமி தலைமையிலான போலீசார் செல்வராணியை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான செல்வராணி மீது கஞ்சா வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் அடிக்கடி கைதாகி உள்ள செல்வராணி, தற்போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகருக்கு மாற்றிவிட்டார்.
அங்கிருந்து அவ்வப்போது திசையன் விளைக்கு வந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 31-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தங்க பதக்கங்கள் பெற்ற 111 பேருக்கும், முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேருக்கும் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக படங்களை வழங்கினார்.
விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டங்கள் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வாசித்தார்.
தொடர்ந்து தேசிய புவி அறிவியல் துறை இயக்குனர் சலபதி ராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:-
புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் உள்ள மாணவர்களும் இந்தியாவில் வந்து கல்வி கற்கும் வகையில் இந்திய கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறும் வகையில் கல்வி அமைப்பு நாட்டில் செயல்படுகிறது. உயர் கல்வியில் தொடர்ந்து இந்தியா மேம்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா 2047-ம் ஆண்டு கொண்டாடும் போது உலக அளவில் சமுதாய வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவைகளில் சூப்பர் பவர் என்ற நிலையில் உலக அளவில் இந்தியா அடையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். முன்னதாக தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 111 பேரில் 97 பேர் பெண்கள் ஆவர். அதே போல் முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்களில் 337 பெண்கள் இடம் பெற்றிருப்பதும், அதிகளவிலான பெண்கள் முனைவர் பட்டம் பெற்றதும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் தலையணையின் கீழ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு வரையிலும் நீடித்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டியில் 25 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 9.6 மில்லிமீட்டர், அம்பையில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. அந்த அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 92.55 அடியாக இருந்த நிலையில் இன்று சுமார் 1 அடி அதிகரித்து 93.40 அடியை எட்டியுள்ளது. பிற்பகல் 94 அடிரைய எட்டியது.
அந்த அணைக்கு நேற்று காலை வரை வினாடிக்கு 288 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று காலை நிலவரப்படி 1,185 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.49 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 2 1/4 அடி உயர்ந்து 106.82 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.70 அடியாக உள்ளது. அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் மக்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 46 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 42 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனிடையே இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள நடத்தகூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 38 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆயக்குடி, சிவகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. ராமநதியில் 24 மில்லிமீட்டரும், கடனா அணையில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 42 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 55.50 அடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்று காலை வரை அங்கு 32.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் நேற்று 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வரும் 40 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 4 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்