என் மலர்
உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி இளம்பெண் பலி:2 பேர் படுகாயம்
- பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 38), இவரது தங்கை தமிழ்செல்வி (36). இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகின்றனர். நேற்று மாலை பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே நல்லாவூரைச் சேர்ந்த குணசேகரன் (42) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் மோட்டார் சைக்களில் ஏறினர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள புளிச்சபள்ளத்தில் உள்ள வாணிபக் கழக குடோன் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார். மேலும், தமிழ்செல்வி, குணசேகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த குணசேகரன், தமிழ்செல்வியை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






