search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் தொடர் திருட்டால் பயணிகள் அச்சம்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் பஸ் நிலையத்தில் தொடர் திருட்டால் பயணிகள் அச்சம்

    • மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள்,அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால்,பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பஸ் நிலையத்தில் பொது மக்கள் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் மொபைல் போன்களை திருடி செல்கின்றனர்.

    கடந்த இரு வாரங்களில் தினமும் ஒரு மொபைல் போன் திருட்டு போகிறது. அவசர,அவசரமாக பஸ்சில் ஏறுபவர்களிடம் மொபைல் போன்கள் திருடப்படுகிறது. சிலர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×