search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 மணி நேர பணி அதிகரிப்பால் ஆயத்த ஆடை ஆர்டர்களை குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்ப முடியும் - தொழில்துறையினர் கருத்து
    X

    கோப்புபடம்.

    12 மணி நேர பணி அதிகரிப்பால் ஆயத்த ஆடை ஆர்டர்களை குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்ப முடியும் - தொழில்துறையினர் கருத்து

    • தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.
    • பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பின்னலாடை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்த மசோதா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பெருமளவு வலுசேர்க்கும். திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் என்பது பருவகாலம் சார்ந்த தொழில். முந்தைய சட்டத்தின்படி, ஆர்டர்கள் அதிகம் இருந்த காலத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்கள் அனுப்பி வைக்கும் நேரத்திலும் வேலை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

    பின்னலாடை நிறுவனங்கள் குறித்த நேரத்தில் ஆடை உற்பத்தியை முடிக்க முடியாமல் காலதாமதமாக ஆர்டர்களை முடித்து, அதை கப்பலில் அனுப்புவதற்கு பதிலாக, விமானத்தில் 10 மடங்கு கட்டணத்தை செலுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக உற்பத்தி நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நிறுவனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வேலையிழப்பு, உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.

    அதிகப்படியான நேர வேலை தருவதற்கான சூழல் இல்லாத காரணத்தால், பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் போட்டி நாடுகளுக்கு தொடர்ந்து செல்கிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை நோக்கி உலகளவில் வர்த்தக வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற அடிப்படை சீரமைப்பு நிச்சயமாக தொழில் வாய்ப்புகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும்.

    ஆயத்த ஆடை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நேரத்தில், இதுபோன்ற சட்ட திருத்தங்கள் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையை செயலாக்கிடும் பணியில் துணை நிற்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னிந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளதாவது:- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்தபடி 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வர்த்தகம் ரூ.87 லட்சம் கோடியை எட்டும். ஏற்றுமதியாளர்கள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும்போது தொழிலாளர்களுக்கு சாதகமான நேரத்தை மாற்றியமைக்க முடியும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும். இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. இந்த நடவடிக்கை மூலமாக தொழில் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்களை முடித்து அனுப்பும் சூழ்நிலையில் வேலைநேரம் அதிகரிப்பால் மிகுந்த பலன் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×