search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் : குழந்தைகள் காப்பக நிர்வாகி, விடுதி காப்பாளர் சிறையில் அடைப்பு
    X

    செந்தில்நாதன், கோபிகிருஷ்ணன்.

    திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் : குழந்தைகள் காப்பக நிர்வாகி, விடுதி காப்பாளர் சிறையில் அடைப்பு

    • காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காப்பகத்தின் நிர்வாகி மற்றும் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக அறங்காவலராக செந்தில்நாதன் (வயது 58) என்பவர் இருந்து வந்தார். விடுதி காப்பாளராக கோபி கிருஷ்ணன் (54) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் உள்பட 15 சிறுவர்கள் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி இரவு காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் மறுநாள் காலை மாதேஷ் (15), பாபு (13), ஆதிஷ் (8) ஆகிய 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து மற்ற 11 சிறுவர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வருவாய்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். மேலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தை பார்வையிட்டு, காப்பகத்தை மூடவும் உத்தரவிட்டார். இதையடுத்து விவேகானந்தா சேவாலயம் மூடப்பட்டு, கடந்த ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், விடுதி காப்பாளர் கோபி ஆகியோரை 2 சட்ட பிரிவுகளின் கீழ் திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×